அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் நியமனத்திற்கான எழுத்துத் தேர்வு, கடந்த 2017ஆம் ஆண்டு நடந்தது. இந்தத் தேர்வுக்கு பிறகு வெளியான முடிவுகளில் பல்வேறு குழப்பங்களும் குளறுபடிகளும் உள்ளதாகக் கூறி பலரும் இதனை ரத்துச் செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், மூன்று ஆண்டுகளாக இழுபறியில் இருந்த தேர்வு முடிவுகளின் இறுதி பட்டியல், கடந்த மாதம் 28ஆம் தேதி வெளியானது. அதன்படி, இன்றும், நாளையும் பள்ளிக் கல்வித்துறையில் பணி நியமன கலந்தாய்வு நடைபெறுகிறது. இந்நிலையில், இறுதிப் பட்டியலிலும் குளறுபடிகள் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது வெளியிடப்பட்ட பட்டியல் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இறுதிப் பட்டியலில் பல தேர்வர்கள் வேலைவாய்ப்பு அலுவலக முன்னுரிமைக்கான மதிப்பெண்கள் 1,2, மற்றும் பூஜ்ஜியம் என்று பெற்றிருந்தனர். ஆனால் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள இறுதிப் பட்டியலில், 18 க்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு அலுவலக முன்னுரிமைக்கான முழுமையான மதிப்பெண்களை பெற்று, தேர்வு பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
இதில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் எப்படி பழைய பட்டியலுக்கும் புதிய பட்டியலுக்கு இவ்வளவு மாறுபாடு எனவும் கேள்வி எழுந்துள்ளது. இதன் காரணமாக இதில் பல குளறுபடிகள் நடந்திருக்கலாம் என தேர்வர்களும், ஆசிரியர் சங்கங்களும் குற்றஞ்சாட்டியுள்ளன.
தற்போது வெளியிடப்பட்ட பட்டியல் இறுதித் தேர்வுப் பட்டியலில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதன் பிறகே பணி நியமன கலந்தாய்வை நடத்த வேண்டும் என்றும் கலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.