சென்னை:மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து தொடந்து நிர்வாகிகள் விலகி வருகின்றனர். இதனால் இந்த கட்சியின் வருங்காலம் கேள்விக்குறியாக உள்ளது. மக்கள் நீதி மய்யம் 2018ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதற்கு இதன் விளைவாக 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கிட்டத்தட்ட 3.7 விழுக்காடு வாக்குகள் பெற்று நாங்களும் அரசியல் களத்தில் இருக்கிறோம் என்று அழுத்தமாக தெரிவித்தது.
அடுத்து 2021ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என நம்பிக்கையுடன் சரத் குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ரவி பச்சமுத்து கட்சியுடன் கூட்டணி வைத்து மக்கள் நீதி மய்யம் களம் கண்டது. ஆனால், அதிலும் தோல்வியே மிஞ்சியது. நாடாளுமன்ற தேர்தலில் 3.7 விழுக்காடு பெற்ற கட்சி, சட்டப்பேரவைத் தேர்தலில் 2.5 விழுக்காடு மட்டுமே வாக்குப் பெற்றது.
சட்டப்பேரவைத் தேர்தலின் தோல்விப் பிறகு கமல், சர்வாதிகார போக்குடன் நடந்துகொள்வதாகக் கூறி அக்கட்சியிலிருந்து முருகானந்தம், குமரவேல், மகேந்திரன், பத்மபிரியா, சந்தோஷ்பாபு உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் இருந்த 15 பேர் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். இதுமட்டுமின்றி 2ஆயிரம் கிளை செயற்குழு உறுப்பினர்களும் கட்சியில் இருந்து விலகிக்கொண்டனர்.
அன்று தொடங்கியது இன்று வரை கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து விலகி கொண்டே உள்ளனர். சமீபத்தில் தொல்காப்பியன், மாநில துணைச் செயலாளர், சுரேஷ் பாபு மாநில இணை செயலாளர் உள்ளிட்டோர் கட்சியை விட்டு விலகினார்கள். இது போன்று தொடர் விலகலுக்கு என்ன காரணம் என்று கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மக்கள் நீதி மய்யத்தின் மேட்டூர் நகர செயலாளர் ஜோதிரத்தினம் கேட்டோம்.
அப்போது அவர், "மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் கமல்ஹாசனுக்குத் தெரியாமல் பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். கமல்ஹாசனை நோக்கி மக்கள் வர தொடங்கினர். ஆனால் அதை கட்சி மேல்மட்ட நிர்வாகிகள் தங்களது சொந்த ஆதாயத்திற்கு பயன்படுத்திக்கொள்கின்றனர். குறிப்பாக தங்கள் தொகுதி மாவட்டச் செயலாளர் மக்கள் நீதி மய்யம் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்குவதாக கூறி நன்கொடை பெற்று அதை தன் சொந்த செலவுக்கு பயன்படுத்தி வருகிறார்.
இதை நான் தட்டிக் கேட்டபோது என்மீது பொய்யான பாலியல் குற்றச்சாட்டை முன் நிறுத்தி கட்சியில் இருந்து நீக்கிவிட்டார்கள். அதுமட்டுமின்றி தொண்டர்களை கமல்ஹாசனிடமிருந்து பிரித்து வருகின்றனர். கமல்ஹாசன் என்ன நினைக்கிறாரோ அதை ஒரு விழுக்காடு கூட மேல்மட்ட நிர்வாகிகள் செய்வதில்லை, இது தான் தொடர் விலகலுக்கு காரணம். அதுமட்டுமின்றி 3 விழுக்காடு இருந்த வாக்கு குறைந்ததிற்கும் இதுவே காரணம்" எனத் தெரிவித்தார்.