சென்னை:அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்குகள் ஐந்தாவது நாளாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் இன்று (ஜூன் 09) விசாரணைக்கு வந்தன. அப்போது அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்துக்கு எதிரான வழக்கு, ஜூலை 11-ல் பொதுக்குழு கூட்டியதை எதிர்த்த வழக்குகள் குறித்து வாதங்களை முன்வைத்தார்.
அப்போது பேசிய அவர், கடந்த 1972ம் ஆண்டு எம்.ஜி.ஆர். கட்சியை தொடங்கியது முதல் 2017 வரை, கட்சியை பொதுச் செயலாளர் தான் நிர்வகித்ததாகவும், இடையில் நான்கு ஆண்டுகள் மட்டுமே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரட்டை தலைமை அமலில் இருந்ததாகவும் குறிப்பிட்டார். 2022 ஜூலை 11-ல் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கட்சி விதி திருத்தங்கள் குறித்து அன்றைய தினமே தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவித்ததாகவும், 10 மாதங்களுக்கு பின் அந்த திருத்தங்கள், தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், கட்சி நலனை கருத்தில் கொண்டு மீண்டும் ஒற்றைத் தலைமைக்கு மாறுவது என கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கோரிக்கை முன் வைக்கப்பட்டதாகவும், மீண்டும் பொதுச்செயலாளர் பதவி கொண்டு வந்ததன் மூலம் கட்சி அடிப்படை கட்டமைப்பு பாதிக்கப்பட்டதாக கூறுவது தவறு எனவும் வாதிட்டார். தொடர்ந்து பேசிய அவர், கட்சி தொடங்கியது முதல், 2017ஆம் ஆண்டு வரை பொதுச் செயலாளராக போட்டியிடுவதற்கு உறுப்பினராக இருந்தால் போதும் என்ற நிலை இருந்தது எனவும், தற்போது கட்சியின் அடிமட்ட அளவில் செல்வாக்கு பெற்றவர்கள் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு போட்டியிட முடியும் என்ற வகையில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவித்தார்.