மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் என்பது கிராமப்புற பகுதியில் உள்ள மக்களுக்கு வருடத்தில் 100 நாட்கள் வேலையளித்து அதன் மூலம் அவர்கள் வாழ்வாதாரத்தினை உயர்த்துவதாகும். தமிழ்நாட்டில் சுமார் 130 லட்சம் பேர் இந்தத் திட்டத்தில் பணி செய்ய பதிவு செய்திருக்கிறார்கள். இதில் நாள்தோறும் 85 லட்சத்துக்கும் அதிகமானோர் பணியில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு256ரூபாய் ஊதியம் அளித்திட வேண்டும். எனினும் இந்த ஊதியம் வேலைக்கு ஏற்ப மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பது ஒன்று : நடப்பது ஒன்று
இந்தத் திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 15 நாட்களுக்குள் ஊதியத்தை வழங்க வேண்டும் என்று விதியில் உள்ளது. ஆனால் பல தாலுகாக்களில் ஒரு மாதமாகியும் ஊதியம் வங்கியில் செலுத்தப்படவில்லை என்றே கூறுகின்றனர். மேலும் சில தாலுகாக்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் வேலை பார்த்த பணியாளர்களுக்கு இன்னும் சம்பளம் வந்தபாடில்லை. இது தொடர்பாக ஊராட்சி செயலாளர்கள், கண்காணிப்பு பணியாளர்கள், பஞ்சாயத்து தலைவர்களிடம் கேட்டால் சரியான பதில் இல்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் உள்ள கிராமப்புற பெண்கள் ஊதியம் பெறாமல் பெரும் இன்னலை சந்தித்து வருகின்றனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பெண்மணி கூறுகையில், "பணி முடிந்த ஒரு வார கால இடைவெளியில் அரசு ஊதியத்தை வங்கியில் செலுத்த வேண்டும். அதன் மூலம் வீட்டிற்கு தேவையான அத்தியாவாசிய பொருட்களை இந்த கடினமான நேரத்தில் வாங்க முடியும் " என்றார்.
மேலும் திருச்சி மாவட்ட விவசாயிகள் சங்க செயலாளர், அயிலை சிவசூரியன் கூறுகையில், "இந்த திட்டத்தை கொண்டுவந்ததன் காரணமே பாமர மக்களின் பசியினை போக்குவதற்கே. ஆனால் இன்றைய நிலவரப்படி இரண்டு மாதமாகியும் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. மேலும், சம்பளம் குறைவாக கொடுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது. இதனை முறைப்படுத்த வேண்டும் .
தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் விவரம் அலுவலர்கள் தங்களது பதிவேட்டில் பணியாளர்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டிய வேலை, ஊதியத்தை தெரியப்படுத்த வேண்டும். மேலும் கரோனா ஊரடங்கால் 55 வயதுக்கு மேற்பட்டோர் வேலைக்கு வரவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையும் அரசு கவனத்தில் கொண்டு அவர்களை சிறிய பணிகளில் ஈடுபடுத்தி, அவர்களது பொருளாதாரத்தை மேம்படுத்த உதவவேண்டும்" என்றார்.
100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் இது குறித்து அனைத்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்களுக்கு விளக்கம் கேட்டு சுற்றறிக்கை அனுப்பப்படும் என்று ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அலுவலர் தெரிவித்தார்.