தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவிகளிடம் அத்துமீறிய விவகாரத்தில் மேலும் ஒரு தனியார் பள்ளி ஆசிரியர் கைது! - பாலியல் புகார்

பாலியல் புகாருக்கு உள்ளான சென்னை, தனியார் பள்ளி ஆசிரியர் ஆனந்தன், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பள்ளி ஆசிரியர் கைது
பள்ளி ஆசிரியர் கைது

By

Published : Jun 8, 2021, 10:17 PM IST

Updated : Jun 9, 2021, 5:44 AM IST

சென்னை: சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளியில் பணியாற்றும், வணிகவியல் ஆசிரியர் ஆனந்தன், மேல்நிலை வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக வலைதளத்தில் புகார் எழுந்தது. இது தொடர்பாக அப்பள்ளி நிர்வாகம் விசாரணை நடத்தி ஆசிரியர் ஆனந்தனை முன்னதாக பணியிடை நீக்கம் செய்தது.

தீவிர விசாரணை

முன்னதாக, தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகளிடமும், ஆசிரியர் ஆனந்தனிடம் விசாரணை நடத்த வரும் 10ஆம் தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி, மாவட்டக் குழந்தைகள் நலக்குழு அலுவலர்களும் விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.

ஆனால், ஆசிரியர் ஆனந்தன் மீது மாணவிகள் புகார் அளிக்கத் தயங்கியதால், அடுத்தக்கட்ட விசாரணையை நடத்த முடியாமல் இருந்தது. இந்நிலையில் அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவி ஒருவர் தற்போது புகார் அளித்துள்ளார்.

ஆசிரியர் கைது

கடந்த 2014ஆம் ஆண்டில் பதினோராம் வகுப்பு படித்த மாணவியை பாலியல் தொந்தரவு செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஆசிரியர் ஆனந்தனை கைது செய்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஆனந்தனை கரோனா தொற்று பரிசோதனைக்கு உள்படுத்தி, போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஆசிரியர் ஆனந்தன் செய்முறை மதிப்பெண்களை காரணம் காட்டி, மாணவிகளை மிரட்டி அவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க:சுற்றுச்சூழல் தினத்தில் கஞ்சா நடவு- கேரளத்தில் விநோதம்!

Last Updated : Jun 9, 2021, 5:44 AM IST

ABOUT THE AUTHOR

...view details