லாட்டரி அதிபர் மார்டின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது மார்டினிடம் உதவியாளராக வேலை செய்யும் கோவையை சேர்ந்த பழனிசாமியை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றனர். மூன்று நாட்களுக்கு பின்னர் அவரது உடல் கோவை மாவட்டம், வெள்ளியங்காடு கிராமத்தில் உள்ள குளத்தில் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் பழனிசாமியின் மகன் ரோஹின்குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், என் தந்தையின் சாவில் மர்மம் உள்ளது, அவரது முகத்தில் ரத்த காயம் உள்ளது. எனவே, சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு வழக்கை மாற்ற வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
மேலும், என் தந்தையின் உடலை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்துவிட்டனர். எனவே, எனது சார்பில் ஒரு டாக்டர் முன்னிலையில் மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும். என் தந்தையை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றபோது, சாதி பெயரை சொல்லித்திட்டியதால், எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவுகளை வழக்கில் சேர்க்கவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர், தண்ணீரில் மூழ்கி இறந்தவரின் முகத்தில் எப்படி ரத்த காயம் வந்தது என கேள்வி எழுப்பினர். அதற்கு விளக்கம் அளிக்க போலீஸ் தரப்புக்கு உத்தரவிட்டனர்.இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.