சென்னை:மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் சிவானந்த், நேற்று (டிச.12) இரவு பாடி மேம்பாலம் கோயம்பேடு நோக்கி செல்லும் சாலையில் ஜீப்பில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் இருந்த நபர் ஒருவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
மேலும் விபத்துக்குள்ளான நபர் காயங்களுடன் மயங்கி இருப்பதை பார்த்த ஆய்வாளர் சிவானந்த், உடனே ஜீப்பை நிறுத்தி காயமடைந்த நபரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். பின்னர் காயமடைந்த நபரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்க நினைத்த சிவனாந்த், அவரது பையை திறந்து பார்த்துள்ளார்.
அப்போது அதில் 1.41 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.7 கிலோ தங்க நகைகள் இருந்துள்ளது. பின்னர் அவரது ஓட்டுநர் உரிமம் மற்றும் செல்போனில் கடைசியாக பேசிய நபருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதேநேரம் காயமடைந்த நபர் குறித்து திருமங்கலம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதில் காயமடைந்த நபர், சென்னை மேற்கு மாம்பலம் காந்தி தெருவை சேர்ந்த ஹரிஹரன் (55) என்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து புழலில் இயங்கி வரும் கோல்டு நிறுவனத்தில் ஹரிஹரன் பணியாற்றி வருவதும் தெரிய வந்துள்ளது.