சென்னை: மதுரை வீரன் உண்மை வரலாறு என்ற புத்தகத்தை குழந்தை ராயப்பன் என்பவர் எழுதி இருக்கிறார். இந்த நூலை ஆதித் தமிழர் பேரவை என்ற அமைப்பு வெளியிட்டு உள்ளது.
இந்த புத்தகத்தில் ஆட்சேபணைக்குரிய, திரித்து எழுதப்பட்ட தகவல்களைக் கொண்டதாக இருப்பதோடு, பல சமூகத்தினரை விமர்சனம் செய்வதாகவும், சாதியவாதத்திற்கு காரணம் என்று குற்றம் சாட்டுவதாகவும் கூறி, இந்த புத்தகத்துக்கு தடை விதித்து கடந்த 2015ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு இருந்தது. அதேநேரம், அந்த புத்தகங்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.
இந்த தடையை எதிர்த்து புத்தகத்தை எழுதிய குழந்தை ராயப்பன், கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், மதுரை வீரன் உண்மை வரலாறு என்ற புத்தகத்தில் மதுரை வீரனின் வீரத்தை குறிப்பிட்டு எழுதி உள்ளதாகவும், சாதி ரீதியாக எதுவும் இல்லை என்றும் அதில் சுட்டிக்காட்டி இருந்தார். இந்த புத்தகத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இதையும் படிங்க:சென்னை - பெங்களூரு விரைவு ரயிலில் திடீரென வெளியான புகை; நடந்தது என்ன?
இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில், ஏற்கனவே 2 ஆயிரம் புத்தகங்கள் விற்பனையாகி விட்டது என்றும், ஜனநாயக நாட்டில் கருத்துரிமைக்கு தடை விதிக்க முடியாது என்றும் வாதிடப்பட்டது. அதே போன்று இந்த புத்தகத்தில் ஆட்சேபத்துக்குரிய கருத்துக்கள் இடம் பெற்றுள்ளதாகவும், அது பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தடை விதிக்கப்பட்டதாகவும், அதற்கு அரசுக்கு அதிகாரம் உள்ளதாகவும் அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும், குற்ற விசாரணை முறைச் சட்டம் 96வது பிரிவின்படி, புத்தகங்களை பறிமுதல் செய்ததை எதிர்த்த வழக்குகளை மூன்று அல்லது மூன்றுக்கும் மேற்பட்ட நீதிபதிகள்தான் விசாரிக்க வேண்டும் எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசுத் தரப்பில் முன் வைக்கப்பட்ட இந்த ஆட்சேபத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்க வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:முன்னாள் டிஜிபி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடக்கம்:மர்ம நபர்கள் அட்டூழியம்!