சென்னை:மெட்ரோ ரயில் திட்டத்தை மதுரை மாநகரிலும் செயல்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி மதுரை நகரில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும்படி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தை அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து சென்னை மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் அர்ச்சுனன் கூறும்போது, "மதுரை மாநகர் மக்களின் போக்குவரத்து வசதிக்காக விரைவு போக்குவரத்து அமைப்புக்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் வெளியிட்டுள்ளது. இதில் முதற்கட்ட திட்டம், 18 ரயில் நிலையங்களுடன் 31 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இது திருமங்கலத்தில் இருந்து ஒத்தக்கடை வரையிலான போக்குவரத்து திட்டமாகும்.