சென்னை: அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்கிங் (Out of the Box Thinking) என்ற பாடத் திட்டத்தின் 3 மற்றும் 4வது நிலையில் படிப்பதற்கு, வருகிற மே 7ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என சென்னை ஐஐடி அறிவித்துள்ளது. மாணவர்களிடம் புதுமையான சிந்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், கணிதம் மூலம் 'அவுட் ஆஃப் தி பாக்ஸ்' என்ற பாடத்திட்டத்தை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியது. ஏற்கனவே, 1 மற்றும் 2ஆம் நிலையில் பாடத் திட்டம் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 3 மற்றும் 4ஆம் நிலையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலை 1 மற்றும் 2 ஆகியவற்றில் ஆன்லைன் மூலம் 1 லட்சத்து 42 ஆயிரம் பேர் பதிவு செய்து, ஆன்லைன் மூலமே படித்தனர். கட்டணம் இன்றி ஆன்லைனில் இந்தப் பாடத்திட்டம் கற்பிக்கப்படுவதுடன், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கிரேடு சான்றிதழும் வழங்கப்படுகிறது.
அதேநேரம், இதற்கானத் தேர்வினை எழுதுவதற்கான கட்டணமும் குறைந்த அளவே நிர்ணயிக்கப்படுகிறது. இதன் காரணமாக, இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள அனைவருக்கும் ஆன்லைன் முறையில் இலவசமாக பாடத் திட்டம் கிடைக்கிறது. ஏற்கனவே முதல் மற்றும் 2ஆம் நிலையை படித்தவர்கள், 3 மற்றும் 4ஆம் நிலையில் படிப்பதற்கு ஆன்லைன் மூலம் https://pravartak.org.in/oobtregistration_math என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
இது குறித்து சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறுகையில், “இந்தியாவிலேயே முதன் முறையாக உருவாக்கப்பட்ட ‘அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்கிங்’ பாடத்தின் 1 மற்றும் 2ஆம் நிலைகள் நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்த படிப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு, குறிப்பாக கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு பெரிதும் பயன் அளிக்கும்.