தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறப்பு டிஜிபி மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கு: குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்ய சிபிசிஐடி-க்கு உத்தரவு!

சென்னை: சிறப்பு டிஜிபி மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கு விசாரணையை ஆறு வாரத்திற்குள் முடித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்ய சிபிசிஐடி-க்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிசிஐடி-க்கு உத்தரவு
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிசிஐடி-க்கு உத்தரவு

By

Published : Apr 30, 2021, 5:11 PM IST

தமிழ்நாடு சட்டம்- ஒழுங்கு சிறப்பு டிஜிபி, பெண் ஐபிஎஸ் அலுவலர் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக டிஜிபி திரிபாதியிடம் அந்த பெண் ஐபிஎஸ் புகார் அளித்தார். இதையடுத்து, சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீது சிபிசிஐடி 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறார். ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பான வழக்கு ஆவணங்களை மூடி முத்திரையிட்ட உரையில் காவல்துறை தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கை உயர் நீதிமன்றம் நேரடியாகக் கண்காணிக்கும், விசாரணையின் முன்னேற்றம் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று (ஏப்.30) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், 106 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு உள்ளதாகவும், இன்னும் 30 சாட்சிகள் விசாரிக்கப்பட வேண்டியுள்ளது எனவும் தெரிவித்தார். அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சோமையாஜி, ஏற்கனவே விசாக கமிட்டி அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு, முடிவுக்காக காத்திருப்பதாக குறிப்பிட்டார்.

இதையடுத்து நீதிபதி இன்னும் விசாரணையை முடிக்க எத்தனை நாட்கள் தேவைப்படுகிறது என்று கேள்வி எழுப்பினார். அப்போது விசாரணை அதிகாரி சார்பில், 4 முதல் 8 வாரங்கள் ஆகும் என தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சிறப்பு டிஜிபி மீதான வழக்கை 6 வாரத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அரசிடம் அனுமதி பெற்று சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணை ஜூன் மாதம் 18 ஆம் தேதி ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: மே மாத ஊரடங்கின் கட்டுபாடுகளும், தளர்வுகளும்!

ABOUT THE AUTHOR

...view details