சென்னை:2022 ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கட்சியிலிருந்து நீக்கியது, பொதுச் செயலாளர் பதவி உருவாக்கம் உள்ளிட்ட தீர்மானங்களை எதிர்த்து மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களில் அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பதிலளிக்க நீதிபதி கே.குமரேஷ் பாபு உத்தரவிட்டிருந்தார்.
இதனிடையே அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி, அவர்கள் மூவருடன் சேர்ந்து ஒ.பன்னீர்செல்வமும் கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தபோது, எந்த வாய்ப்பும் அளிக்காமல், எந்த காரணமும் கூறாமல் கட்சியிலிருந்து நீக்கியது தன்னிச்சையானது, நியாயமற்றது என்றும், பெரும்பான்மை உள்ளதால் எந்த முடிவும் எடுக்க முடியும் என வாதிடப்பட்டது.
தற்போது பொதுக்குழு உறுப்பினர்களாக இருப்பவர்கள் அனைவருமே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரால் நியமிக்கப்பட்டவர்கள் தான் என்றும், தங்களை கட்சியிலிருந்து நீக்கும் தீர்மானம் தொடர்பாக ஜூலை 11 பொது குழுவில் எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லாத நிலையில், சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர் என்றும் குற்றம்சாட்டப்பட்டது.
ஆனால் இந்த சிறப்பு தீர்மானத்தின் மீது எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி பெறுவதற்காக முக்கிய பதவி வகித்த தன்னை திட்டமிட்டு நீக்கி தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, பொது செயலாளர் தேர்தல் நடத்தி ஒற்றை தலைமையை உருவாக்கும் நோக்கம் மட்டுமல்ல என்றும், போட்டியே இல்லாமல் அந்த பதவிக்கு எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் குற்றம்சாட்டபட்டது.