தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விதிகளை மீறி ஸ்பெஷல் ஷோ.. ரோகிணி தியேட்டருக்கு ரூ.24,000 அபராதம்.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

Chennai rohini theater: விதிகளை மீறி, கடந்த ஜனவரி மாதம் அதிகாலை காட்சி திரையிட்ட ரோகிணி திரையரங்க நிர்வாகத்திற்கு, 24,000 ரூபாய் அபராதம் விதித்ததை உத்தரவை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 13, 2023, 8:23 PM IST

சென்னை: தமிழ்நாடு சினிமா விதிகளில், திரையரங்குகள் ஒரு நாளைக்கு நான்கு காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும் எனவும், பண்டிகை நாட்களில் ஒரு காட்சி கூடுதலாக, அதாவது 5 காட்சிகள் திரையிட்டுக் கொள்ளலாம் எனவும் அறிவித்திருந்தது. விதிகளை மீறும் பட்சத்தில் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை ஒட்டி நடிகர் விஜய் நடித்த "வாரிசு" திரைப்படமும், நடிகர் அஜித் நடித்த "துணிவு" படமும் வெளியாகின. இப்படங்கள் வெளியான கடந்த ஜனவரி 11ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு காட்சி திரையிடப்பட்டதாக கூறி, சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்குக்கு 24,000 ரூபாய் அபராதம் விதித்து சென்னை மாநகர காவல் ஆணையர், கடந்த மார்ச் 31ஆம் தேதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், அந்த உத்தரவின் அடிப்படையில் கடும் நடவடிக்கைகள் எடுக்க தடை விதிக்க கோரியும் ரோகிணி திரையரங்கு நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், ஏற்கனவே ஓ.டி.டி. போன்றவற்றால் திரையரங்குகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், அரசின் கட்டுப்பாடுகள் இழப்பை ஏற்படுத்துவதாகக் கூறப்பட்டு இருந்தது.

கடந்த ஜனவரி 11ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கும், 4 மணிக்கும் காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், எந்த முறையான விசாரணையும் நடத்தாமல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கடைகள் மற்றும் நிறுவன சட்டத்தின் கீழ் திரையரங்குகளில் 24 மணி நேரமும் திரையிட முடியும் எனவும், அதன் அடிப்படையிலே அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், காவல்துறை சார்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, கடைகள் மற்றும் நிறுவன சட்டத்தின் கீழ் திரையரங்குகளில் சினிமா காட்சிகளை திரையிட முடியாது என்றும், சினிமா ஒழுங்கு விதிகளுக்கு உட்பட்டதால் தான் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி சேஷசாயி, சிறப்பு காட்சிகளை திரையிட்ட ரோகிணி திரையரங்கத்துக்கு விதிக்கப்பட்ட 24,000 அபராதத்தை உறுதி செய்து, ரோகிணி திரையரங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட 9 மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரியில் 19 எம்பிபிஎஸ் இடங்கள் காலி.. ஈடிவி பாரத் கள ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

ABOUT THE AUTHOR

...view details