சென்னை:சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி, கடந்த 2015ஆம் ஆண்டு தேமுதிக சார்பில், அதன் தலைவர் விஜயகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், “மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன பேசுகிறார்கள்? எதற்காக குரல் கொடுக்கிறார்கள்? என்பதை வாக்களித்த மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இந்திய நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதனால், தங்கள் தொகுதி உறுப்பினர்களின் செயல்பாடுகளை மக்களால் நேரலையில் தெரிந்து கொள்ள முடிகிறது.
அதேபோல, தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும், அவ்வாறு செய்யாததால் சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளை மக்களால் நேரடியாக தெரிந்து கொள்ள முடியவில்லை. இதனால் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது மக்கள் கோபம் கொண்டு அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வாய்ப்புள்ளது.
நேரடி ஒளிபரப்பு செய்ய முடியாததால் ஆளுங்கட்சி மட்டுமே மக்கள் நலத்திட்டங்களை அறிவிப்பதாக மக்களுக்கு தெரிகிறது. எதிர்கட்சி மற்றும் இதர சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் மக்களுக்கு தெரியாமல் திட்டமிட்டு மறைக்கப்படுகிறது. தங்கள் தொகுதிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளை தெரிந்து கொள்ள அனைத்து குடிமக்களுக்கும் உரிமை உள்ளது. நேரடி ஒளிபரப்பு செய்யாமல் தடுப்பது என்பது மக்களின் உரிமைகளை பறிப்பதாக ஆகிவிடும். எனவே, சட்டமன்ற கூட்டத் தொடரை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.