சென்னை:கோயம்புத்தூர் மாவட்டம் அவிநாசியைச் சேர்ந்த பாலசுந்தரம் என்பவர், பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என சாதிச் சான்றிதழ் அளித்து 1982ஆம் ஆண்டு கோவை வன மரபியல் நிறுவனத்தில் கலாசியாக பணிக்கு சேர்ந்துள்ளார். பின்னர் 1999ஆம் ஆண்டு அவருக்கு இளநிலை எழுத்தராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இந்த நிலையில் அவரது சாதிச் சான்றிதழ், மாநில அளவிலான ஆய்வுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.
அப்போது அவரது சகோதரரும், சகோதரியும் வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என கண்டறிந்த மாநில அளவிலான குழு, அவரது பழங்குடியினர் சாதிச் சான்றிதழை கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரத்து செய்தது. இதன் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற அவரது ஓய்வு கால பண பலன்களும் நிறுத்தப்பட்டன. இதனையடுத்து 40 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட தனது சாதிச் சான்றிதழை தற்போது ஆய்வு செய்து ரத்து செய்வது சட்டப்பூர்வமானது அல்ல எனக் கூறி, பாலசுந்தரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.