சென்னை பள்ளிக்கரணையில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிமுக பேனர் விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
சுபஸ்ரீ விவகாரம் - அரசை கடுமையாக சாடிய சென்னை உயர் நீதிமன்றம்!
சென்னை: பள்ளிக்கரணையில் அதிமுக பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தது தொடர்பான வழக்கில், தமிழ்நாடு அரசை சென்னை உயர் நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.
subasri death
இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு அரசை கடுமையாக சாடியுள்ளது. நீதிமன்றம் எழுப்பிய கேள்விகள் பின்வருமாறு...
- இன்னும் எத்தனை மனித உயிர்களை பலி வாங்கிய பின்னர், அனுமதி இல்லாமல் பேனர் வைப்பதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும்?
- பேனர் விவகாரத்தில் அலுவலர்கள் அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள். இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவைப்படுகிறது?
- பேனர் விவகாரத்தில் நீதிமன்றம் பிறப்பிக்காத உத்தரவுகளே இல்லை. எந்த நிகழ்வு என்றாலும் பேனர் வைத்தால்தான் வருவார்களா? பேனர் வைத்துதான் விருந்தினர்களை அழைக்க வேண்டுமா?
- திருமணம், காதுகுத்து உள்ளிட்ட அனைத்து விழாக்களுக்கும் பேனர் வைக்கப்படுகிறது. இன்னும் விவாகரத்திற்கு மட்டும்தான் பேனர் வைக்கவில்லை?
- அரசுக்கு எதிராக உத்தரவுகளை பிறப்பிக்கும் நீதிமன்றத்தால், அதை செயல்படுத்தும் தகுதி இல்லை என நினைக்கிறீர்களா? உயிரிழந்தவர்களுக்கு அரசோ, கட்சியோ கருணை தொகை கொடுக்கிறது. மனிதனின் வாழ்விற்கு பூஜ்ய மதிப்புதான் கொடுக்கப்படுகிறது.
- பேனர் வைக்கக் கூடாது என ஒரு அறிவிப்புகூட செய்யவில்லை. மெரினா சாலையில் அரசியல் கட்சி கொடி வைக்க யார் அனுமதித்தார்கள். அரசியல் கட்சிகள் கூடுதல் அரசியலமைப்பு அதிகாரம் பெற்றவர்களா?
- ஒரு குற்றம் நடக்க அனுமதிக்கிறீர்கள், பின்னர் குற்றவாளியின் பின்னால் ஓடுகிறீர்கள். விதிமீறல் பேனர் வைக்கும்போது உங்கள் அலுவலர்கள் ஏன் தடுக்கவில்லை. அலுவலர்கள் அப்போது எங்கிருந்தார்கள்?
- விதிமீறல் பேனர்கள் வைக்கக்கூடாது எனவும், வைக்கமாட்டோம் எனவும் முதலமைச்சர் அறிக்கை விடலாமே?