தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை தீவுத்திடல் பொருட்காட்சி டெண்டரை ரத்து செய்ய முடியாது - உயர் நீதிமன்றம்!

சென்னை தீவுத்திடலில் 47ஆவது சுற்றுலா பொருட்காட்சி நடத்துவது தொடர்பான டெண்டரை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Madras
Madras

By

Published : Dec 19, 2022, 9:52 PM IST

சென்னை:சென்னை தீவுத்திடலில் 2023ஆம் ஆண்டுக்கான 47ஆவது இந்திய சுற்றுலா மற்றும் தொழிலக பொருட்காட்சியை நடத்துவதற்கான டெண்டரை, கடந்த அக்டோபர் 31ஆம் தேதி சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ளது. இந்த டெண்டரை எதிர்த்து பெங்களூரைச் சேர்ந்த ஃபன் வேர்ல்டு ரிசார்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

அதில், டெண்டர் கோரி தங்களது நிறுவனம் உள்பட 5 நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்ததாகவும், டெண்டர் திறக்கப்பட்ட போது, தங்கள் நிறுவன பிரதிநிதியை வெளியேற்றிவிட்டு டெண்டரை இறுதி செய்துள்ளதால், டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும் எனவும்; தங்கள் டெண்டர் படிவத்தையும் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும், எனவும் கோரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், டிசம்பர் 19ஆம் தேதி வரை டெண்டரை இறுதி செய்யக்கூடாது என உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த பொருட்காட்சியின்போது அரசுக்கு செலுத்த வேண்டிய பாக்கித் தொகை 3 லட்சம் ரூபாயை செலுத்தாததால்தான் குறிப்பிட்ட நிறுவனத்தின் டெண்டர் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும், இதில் அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்பட்டதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

டெண்டர் நிராகரிக்கப்பட்டது குறித்து தங்கள் தரப்புக்கு தகவல் தெரிவிக்கவில்லை எனவும், டெண்டரை இறுதி செய்ததில் வெளிப்படைத்தன்மை, சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லை எனவும், டெண்டரை நிராகரிக்க டெண்டர் பரிசீலனைக் குழுவுக்கு அதிகாரமில்லை எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு பாக்கித் தொகை வைத்திருந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் டெண்டரில் கலந்து கொள்ள முடியாது என டெண்டர் நிபந்தனைகளில் தெளிவாக கூறப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:சென்னையில் 14 கட்டுமான இடங்களுக்கு சீல் - எதற்கு தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details