சென்னை: தலைமைச் செயலகத்தில் வெள்ளம் மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள், நிவாரண உதவித் தொகை வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்றைய முன்தினம் டிசம்பர் 9ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வெள்ள சேதம் குறித்தும், வழங்கப்பட வேண்டிய நிவாரணத் தொகை குறித்தும் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
இதன் தொடர்ச்சியாக மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 6 ஆயிரம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி, மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையான ரூபாய் 6 ஆயிரம் அந்தந்த பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் என தமிழக அரசால் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தமிழக அரசால் வழங்கப்பட உள்ள நிவாரணத் தொகையான ரூபாய் 6 ஆயிரம் பணத்தை நேரடியாக மக்களின் வங்கிக் கணக்கில் செலுத்த உத்தரவிடக்கோரி சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ராமதாஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவினை தாக்கல் செய்துள்ளார்.