சென்னை:கிருஷ்ணகிரியில் ஆணவ படுகொலை வழக்கில் சரணடைந்த குற்றாவாளிகள் இருவரை போலீஸ் காவலில் எடுத்து ஒரு நாள் விசாரிக்க அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே சுபாஷ் என்பவர் காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம் அடைந்த சுபாஷின் தந்தை தண்டபாணி, கடந்த மார்ச் 21ஆம் தேதி தனது மகனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார். இதைத் தடுக்க சென்ற பாட்டி கண்ணம்மாளையும் கொலை செய்தார். இந்த தாக்குதல் சம்பவத்தில், படுகாயமடைந்த மருமகள் அனுசுயா உயிர்த் தப்பினார். இந்த ஆணவக்கொலை சம்பவத்தில் தலைமறைவாக இருந்த தந்தை தண்டபாணியை போலீசார் கைது செய்த நிலையில், உடந்தையாக இருந்த நாகராஜ், முரளி ஆகியோர் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இந்த நிலையில், நீதிமன்ற காவலில் உள்ள அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக் கோரி, 15 நாட்கள் நீதிமன்ற காவல் நிறைவடைவதற்கு முன்பாக காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்து அனுமதி கோரப்பட்டது. ஆனால், 15 நாட்கள் நீதிமன்ற காவல் நிறைவடைந்து விட்டதால், போலீஸ் காவலுக்கு அனுமதிக்க முடியாது எனக் கூறி, காவல்துறையின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையும் படிங்க:சாதி பெயரைச் சொல்லி திட்டியதாக நெல்லை மேயர் மீது புகார்.. தொடரும் திமுக உட்கட்சி பூசல்
இதனை எதிர்த்து காவல்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு இன்று (ஏப்.29) விசாரணைக்கு வந்தபோது, அப்போது ஆஜரான குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர், இந்த சம்பவத்தில் முதல் குற்றவாளியான தந்தையிடம் காவல்துறையினர் ஏற்கனவே விசாரணை நடத்திவிட்டதால், இருவரிடமும் விசாரணை நடத்த தேவையில்லை எனக் கூறினார்.
இதனிடையே, அப்போது அரசு தரப்பில் வழக்கறிஞர் சந்தோஷ் ஆஜராகி, 15 நாட்கள் நீதிமன்ற காவல் முடிவடைவதற்கு முன்பே போலீஸ் காவல் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டதாகவும், ஆனால் உத்தரவு பிறப்பிப்பதில் நீதிபதி காலதாமதம் செய்ததாகவும் கூறினார். குற்றத்தின் தன்மையைக் கருதி, மனு தாக்கல் செய்த அன்றைய தினமே மனு மீது முடிவெடுத்திருக்க வேண்டுமெனவும் வாதிட்டார். காவல்துறை இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இருவரையும் ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி வழங்குமாறு கிருஷ்ணகிரி நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:சாதி மறுப்பு திருமணம் செய்வர்கள் மீது தீண்டாமையா? - திருச்சி கலெக்டர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!