சென்னை:மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய உத்தரவிடக் கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், ஆயிரத்து 107 பேருந்துகளைக் கொள்முதல் செய்வது தொடர்பாக அரசு வெளியிட்ட டெண்டரை ரத்து செய்யவும் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, “ஆயிரத்து 107 பேருந்துகளில் 157 பேருந்துகளைத் தாழ்தள பேருந்துகளாக அரசு கொள்முதல் செய்ய வேண்டும்.
மீதம் உள்ள 950 பேருந்துகளையும் கொள்முதல் செய்வதற்காக கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட டெண்டரின் அடிப்படையில் நடைமுறைகளைத் தொடர அரசுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. 157 தாழ்தள பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்காகத் தனியாக டெண்டர் கோர தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடப்படுகிறது.
ஏற்கனவே டெண்டர் கோரப்பட்ட 342 தாழ்தள பேருந்துகளையும் சேர்த்து, 499 தாழ்தள பேருந்துகளையும் எந்தெந்த வழித்தடங்களில் இயக்கலாம் என்பது குறித்து அடையாளம் காண, போக்குவரத்துத் துறை, சாலை போக்குவரத்து நிறுவனம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும்.
உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் ஆகியன பல உத்தரவுகளைப் பிறப்பித்தும், தாழ்தள பேருந்துகள் இயக்கப்படவில்லை என்பது வேதனை அளிக்கிறது. இனி வரும் காலங்களில் தாழ்தள பேருந்துகளை மட்டுமே கொள்முதல் செய்ய அரசு முயற்சிக்க வேண்டும்.
தற்போது கொள்முதல் செய்யப்பட உள்ள 499 தாழ்தள பேருந்துகளும் இயக்கப்பட உள்ள சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் இந்த பேருந்துகள் எந்த நேரத்தில் இயக்கப்பட உள்ளன என்பது குறித்து அறிவிக்கும் வகையில், நான்கு நகரங்களுக்கும் தனித்தனி செயலிகளை உருவாக்க வேண்டும்.
இந்த உலகம் மாற்றுத்திறனாளிகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் மற்றும் முதியோருக்கும் சொந்தமானது என்பதால், பொது போக்குவரத்தை அவர்களும் அணுகும் வகையில் அமைக்க வேண்டும். தாழ்தள பேருந்துகளையும் இயக்கும் வகையில் சாலைகளையும், வேகத்தடைகளையும் அறிவியல் பூர்வமாக அமைக்க வேண்டும்.
மேலும், பேருந்து நிறுத்தங்கள், மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் அமைக்க வேண்டும். அதேநேரம், அவர்கள் பேருந்தில் ஏறி இறங்க ஏதுவாக பொறுமையுடன் செயல்படும் வகையில் ஓட்டுநர்களுக்குப் பயிற்சி அளிக்க அறிவுறுத்தப்படுகிறது” என உத்தரவிட்டது.
இதையும் படிங்க:அங்கன்வாடி ஊழியர்களுக்கு கோடை விடுமுறை வழங்கி அரசாணை வெளியீடு!