சென்னை: அதிமுக செய்தித் தொடர்பாளர் திருநங்கை அப்சரா ரெட்டி குறித்து, ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் யூடியூப் தளத்தில் தவறான தகவல்களை பதிவு செய்ததுடன், அவரது புகழுக்கும், கண்ணியத்திற்கும் இழுக்கு ஏற்படும்படி சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருந்ததாக, அப்சரா ரெட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், ஜோ மைக்கேல் பிரவீன் பதிவு செய்ததாக கூறப்படும் 10க்கும் மேற்பட்ட வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும், அவரை சார்ந்தோர்கள் அவதூறான வீடியோ பதிவிட்டிருந்தால், அதையும் உடனடியாக நீக்க வேண்டும் என கூகுள் யூடியூப் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.
மேலும், தனிமனித தாக்குதலில் ஈடுபட்ட யூடியூபர் நடவடிக்கைகளை கண்டித்ததுடன், அப்சரா ரெட்டிக்கு 50 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். சமூகத்தில் திருநங்கைகள் சமுதாயத்தினர் எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் கஷ்டங்களைக் குறிப்பிட்ட நீதிபதி, சமூக வலைத்தளங்களில் பதிவிடும் கருத்துக்கள், அவர்களின் உணர்வுகளை பாதிக்காத வகையிலும், கண்ணியமாக இருக்கும் வகையிலும் வழிநடத்த கூகுள் மற்றும் யூடியூப் நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.