சென்னை: நடிகை ஜெயப்பிரதா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தார். இவர் சென்னை அண்ணாசாலையில் ராம்குமார், ராஜ்பாபு ஆகிய இருவருடன் இணைந்து திரையரங்கம் நடத்தி வந்தார்.
அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களிடம் நவம்பர் 1991 முதல் 2002 வரை 8 லட்சத்து 17 ஆயிரம் ரூபாயும், 2002 முதல் 2005 வரை 1 லட்சத்து 58 ஆயிரமும், 2003-இல் வசூலித்த இ.எஸ்.ஐ பணத்தை தொழிலாளர்கள் அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என குற்றம் சுமத்தப்பட்டது.
இது தொடர்பாக இ.எஸ்.ஐ நிறுவனம் சார்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் 5 வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, தொழிலாளர்கள் காப்பீட்டு பணத்தை திரும்பச் செலுத்தி விடுவதாக ஜெயப்பிரதா சார்பில் கூறப்பட்டது.
இ.எஸ்.ஐ பணத்தை சரியாக செலுத்தாததால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இ.எஸ்.ஐ நிறுவனம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ஜெயப்பிரதா உள்ளிட்ட 3 பேருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத 6 மாத சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி தீர்ப்பளித்தது.
இந்நிலையில், எழும்பூர் நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஜெயப்பிரதா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இ.எஸ்.ஐ தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி, தொழிலாளர்கள் பணத்தைச் செலுத்தாததால் வழக்கு தொடரப்பட்டதாகவும், பணம் செலுத்தவில்லை என பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது எனவும் தெரிவித்தார்.