ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், உடல் நலக் குறைவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்கக்கோரி அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, ராஜிவ் கொலை வழக்கை விசாரித்து வரும் பன்னோக்கு விசாரணை ஆணையம் தற்போது செயல்பாட்டில் உள்ளதா? விசாரணையில் என்ன முன்னேற்றம் உள்ளது? விசாரணை அறிக்கைகள் நீதிமன்றத்தில் எப்போது தாக்கல் செய்யப்படுகிறது? எனக் கேள்வி எழுப்பினர்.
மேலும், பரோல் விண்ணப்பங்கள் மீது இரண்டு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என சட்டத் திருத்தம் கொண்டு வரும்படி ஏற்கெனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? கைதிகளின் பரோல் கோரிய விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்க ஆலோசனைகள் வழங்க சிறைத்துறையில் சட்ட ஆலோசகரை ஏன் நியமிக்கக் கூடாது? எனவும் அரசுக்கு நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.