சென்னை:தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சம்பந்தமான இடங்கள், அவரது சகோதரர் வீட்டில் சமீபத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையைத் தொடர்ந்து சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக கூறி அமலாக்கத்துறை நேற்று செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்கள், அவரது சகோதரர் அசோக் வீட்டில் சோதனை நடத்தினர்.
மேலும் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியுன் அதிகாரப்பூர்வ அறையிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். தலைமைச் செயலகத்தில் உள்ள அறையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் 18 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடந்த நிலையில் இறுதியில் அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியை விசாரிக்க அழைத்துச் சென்றனர். அப்பொழுது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் உடனடியாக அவரை ஓமந்தூரர் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜியை முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் நலம் விசாரித்தனர். அவருக்கு முக்கியமான ரத்த நாளத்தில் மூன்று இடங்களில் அடைப்பு இருப்பதால் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவமனை தரப்பில் அதிகார பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றினைத் தாக்கல் செந்திருந்தார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலாவின் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க தலைமை நீதிபதி கங்கபூர்வாலா ஒப்புதல் அளித்து இருந்தார்.