சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை பகுதியில் மெர்மெய்ட் பிராப்பர்டீஸ் என்ற நிறுவனம் கட்டிய குடியிருப்பில் இருந்து, கிழக்கு கடற்கரை சாலையை அணுகக்கூடிய இடத்தில், திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 9,600 சதுர அடி தரிசு நிலத்தை குத்தகைக்கு பெற்று, குடியிருப்பின் பாதையாக பயன்படுத்தப்பட்டு வந்தது.
குத்தகை முடிவடைந்த நிலையில் அதை நீட்டிக்க கோயில் செயல் அலுவலர் ஆட்சேபம் தெரிவித்ததால், 400 சதுர அடியை மட்டுமே தரத் தயாராக இருப்பதாகவும், அதையும் குத்தகை அடிப்படையில் இல்லாமல் ரூ.7,000 என்ற மாதாந்திர வாடகை அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும் என 2017ஆம் ஆண்டு அறநிலையத் துறை உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மெர்மெய்ட் நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், நிலத்தை கோயில் நிர்வாகம் பயன்படுத்தாமல் இருப்பதால், எதிர்காலத்தில் பயன்படுத்தமாட்டார்கள் என முடிவெடுக்க முடியாது என்பதால், பாதைக்கு தேவைப்படும் நிலத்தை குத்தகை அடிப்படையில் வழங்கும்படி அறநிலையத்துறை மூலமாக மனுதாரர் நிறுவனம் அரசிடம் கோரிக்கை வைக்கலாம் என உத்தரவிட்டார்.