சென்னை: அரும்பாக்கத்தில் உள்ள ஃபெடரல் வங்கியின் துணை நிறுவனமான நகைக்கடன் வழங்கும் ஃபெட் பேங்க் பினான்ஸ் சர்வீஸ் லிட்லில் அடமானம் வைத்த 481 நபர்களின் சுமார் 31கிலோ 700 கிராம் தங்க நகைகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி கொள்ளையடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 11 கோடி ரூபாய் எனத் தெரிகிறது. இந்த கொள்ளை குறித்து அரும்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில் அதே வங்கியில் மண்டல மேலாளராக பணியாற்றிய முருகன் தனது கூட்டாளிகள் பாலாஜி, சந்தோஷ்குமார் ஆகியோருடன் இணைந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து முருகன் மற்றும் அவரது கூட்டாளிகளான சூர்யா, சந்தோஷ்குமார், சந்தோஷ் குமார் உறவினரான அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ், பாலாஜி, செந்தில்குமார் மற்றும் கோவையைச் சேர்ந்த நகை பட்டறை உரிமையாளர் ஸ்ரீவத்சன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
கைதான சந்தோஷின் உறவினரான அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் கொள்ளை போன நகைகளில் 3.5 கிலோ நகைகளை அவரின் வீட்டில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. செந்தில்குமாரின் நண்பரான கோவையைச் சேர்ந்த நகை பட்டறை உரிமையாளர் ஸ்ரீவத்சன் கொள்ளை அடித்த நகையை உருக்க உதவி புரிந்துள்ளார்.