சென்னை:புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் மனிதக்கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
வெள்ளனூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டைச் சேர்ந்த ராஜ்கமல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணனை கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்து கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.
மேலும், ஒரு நபர் ஆணையம், 2 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில், ஒரு நபர் ஆணையம் ஜூலை 28 ஆம் தேதி இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாகவும், அதன் நகலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்கப்பட்டது. அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், நீதிமன்றம் நியமித்த ஆணையத்தின் அறிக்கை ஏன் சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது. ஆணையத்தின் விசாரணையில் என்ன முன்னேற்றம் உள்ளது என தெரிவிக்க வேண்டும் என்றுக் கூறினார்.
இதையடுத்து அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றவது தொடர்பாக ஆணையம் எந்த பரிந்துரையையும் வழங்கவில்லை. வேங்கைவயல் பகுதியில் சந்தேகத்திற்கு உள்ளான 25 நபரின் டி.என்.ஏ மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 4 பேரின் டி.என்.ஏ மாதிரி நிலுவையில் உள்ளது. வழக்கில் இதுவரை 221 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.