சென்னை:தமிழகத்தில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட கோயில் சொத்துகளைப் பற்றிய ஆவணங்களை சேகரித்து மீட்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றம் இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்திலுள்ள சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கோயில்கள் மற்றும் பழமையான கோயில்கள் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்து சமய அறநிலையத் துறை என்பது தமிழ்நாட்டில் இந்து சமய திருக்கோயில்களின் வளர்ச்சிக்காகத் தனித்துறையாக தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.
இத்துறைக்கு, மாநில அளவில் ஒரு செயலகம் தலைமைச்செயலகத்தில் உள்ளது. மேலும் தமிழகத்தில் கோவில் பராமரிப்பு, நிர்வாகப் பணிகள் மேற்கொள்ள வசதியாக, இந்து சமய அறநிலையத்துறை சேலம், கோவை, திருநெல்வேலி, மதுரை, சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை என, 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. பராமரிப்பு, கோயில் சொத்துகளைப் பாதுகாத்தல், பக்தர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தல் ஆகியவையும் இந்து சமய அறநிலையத் துறையின் கடமையாக உள்ளது.
இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது சொத்துகளுக்கான பட்டாவை வழங்க உத்தரவிடக் கோரி குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் விசாரித்தார். நடத்தப்பட்ட விசாரணையில் குறிப்பிட்ட அந்த நிலமானது, நுங்கம்பாக்கத்தில் உள்ள அகத்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலம் என்பது தெரியவந்தது. அதன் காரணமாக கோயிலுக்குச் சொந்தமான நிலத்திற்கு பட்டா வழங்க இந்து சமய அறநிலையத்துறை ஆட்சேபனை தெரிவித்ததாக அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.