தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 9, 2023, 1:49 PM IST

ETV Bharat / state

ஜப்பான் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Japan movie: ஜப்பான் திரைப்படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Japan movie
ஜப்பான் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை

சென்னை: இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் ஜப்பான். இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார்.

முன்னதாக, படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கடந்த அக்.28 ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கார்த்தி, இயக்குநர் ராஜூ முருகன், கே.எஸ்.ரவிக்குமார், பா.ரஞ்சித், தமன்னா, லோகேஷ் கனகராஜ், எச்.வினோத், சுசீந்திரன், முத்தையா, சிறுத்தை சிவா, சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, ஜப்பான் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார். ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் படம் நாளை (நவ.10) திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தை சட்டவிரோதமாக இணையதளங்கள் மற்றும் கேபிள் டிவிகளில் வெளியிடுவதைத் தடுக்க வேண்டுமென அரசு மற்றும் தனியார் இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி படத்தின் தயாரிப்பு நிறுவனம் ட்ரீம் வாரியர்ஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, படத்தின் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம் ஆஜராகி, உலகம் முழுவதும் ஆயிரம் திரையரங்குகளில் ஜப்பான் படம் வெளியாக உள்ளது.

படத்தின் நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் படத்தைத் தயாரித்துள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியானால் நிறுவனத்திற்கு பெருத்த நஷ்டம் ஏற்படும். அதன்மூலம் திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்று வாதிட்டார்.

இதனையடுத்து ஜப்பான் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்த நீதிபதி, அவ்வாறு வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:"2026 தேர்தல் வரை ஆர்.எஸ்.பாரதியும், கனிமொழியும் காத்திருக்கட்டும்" - அண்ணாமலை ஆவேசம்!

ABOUT THE AUTHOR

...view details