சென்னை:ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வந்த தீர்மானத்திற்கும், ஓ.பன்னீர்செல்வம் உள்பட நான்கு பேரை நீக்கிய தீர்மானத்துக்கும் தடை விதிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
இதையடுத்து, அதிமுக கட்சியின் லெட்டர் பேட், பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் தொடர்ந்து பயன்படுத்தி வருவதால், அதற்கு தடை விதிக்கக் கோரி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வதுக்கு 2023 நவம்பர் 6ஆம் தேதி இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் மகாதேவன், முகம்மது சபீக் அமர்வில் விசாரணையில் இருந்தது.
இந்த விசாரணையின்போது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், “ஒரு வழக்கில் தீர்ப்பு வரும் வரை நிவாரணம் பெற உரிமை உள்ளது என உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் தெளிவுபடுத்தியுள்ளது. அதனால், தடையை ரத்து செய்ய கோருகிறோம். வழக்கின் தொடக்கத்திலேயே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எந்த ஆவணங்களோ, சுய விளக்கமோ தங்களிடம் கேட்கப்படவில்லை. தடை உத்தரவு பிறப்பிப்பதற்கு முன் விளக்கமளிக்க பன்னீர்செல்வம் தரப்புக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.
இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துவிட்டு, இறுதி உத்தரவுக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது, தங்களுக்கான சட்ட வாய்ப்புகளை பறிப்பதாகும். அது மட்டுமல்லாமல், மூன்று விதமான அதிமுக கொடிகள் உபயோகிக்கப்பட்டு வருகிறது. அதில் எதை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளிக்கப்படவில்லை.
எனவே, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில், பன்னீர்செல்வம் தரப்பினர் சட்ட ரீதியான நிவாரணம் பெற உரிமை உள்ளது என உயர்நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. அதனால், முழுமையாக அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக கருத முடியாது. எந்த வழக்கிற்கும் எதிர்தரப்பு நிவாரணம் பெற வாய்ப்புகள் வழங்கப்படும், ஆனால் இந்த வழக்கில் எந்த வாய்ப்புகளும் தங்களுக்கு வழங்கப்படவில்லை” என தெரிவிக்கப்பட்டது.