சென்னை:என்.எல்.சி நிர்வாகத்துக்கும், தொழிற்சங்கங்களுக்கு இடையிலான பிரச்னை தொடர்பாக தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடைவிதிக்க வலியுறுத்தி, என்.எல்.சி தரப்பில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் போராட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு, வீடியோ ஆதாரம் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, என்.எல்.சி நிறுவனம் மற்றும் அங்கு பணிக்கு செல்லும் ஊழியர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் கடலூர் மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக ஆகஸ்ட் 3-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.
என்.எல்.சி பணியாளர்களுக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுத்து அவர்களை மகிழ்ச்சியுடன் வைத்திருங்கள் என்றும், அதற்காக பணத்தை செலவிடுங்கள் என்றும் அறிவுறுத்தினார். இதற்கிடையே என்எல்சி நிறுவனத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் கால்வாய் அமைக்கும் பணிகளை எதிர்ப்பு கிளம்பியது குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார்.
என்எல்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நிலத்தின் மதிப்பை விட மூன்று மடங்கு அதிகமாக இழப்பீடு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், 20 ஆண்டுகளுக்கு முன்பாக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு, பத்தாண்டுகளுக்கு முன்பாக இழப்பீடு தொகை கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது நிலத்தை சுவாதீனம் எடுக்க உரிமையாளர்கள் எதிர்த்து வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி தண்டபாணி, 20 ஆண்டுகளாக நிலத்தை சுவாதீனம் எடுக்காமல், பயிரை அறுவடை செய்யும் வரை இரண்டு மாதங்கள் காத்திருக்க முடியாதா? என கேள்வி எழுப்பினார். பயிரிடப்பட்ட நிலத்தில் புல்டோசர்களை விட்டு கால்வாய் தோண்டும் பணிகளை பார்க்கும்போது அழுகை வந்ததாக நீதிபதி வேதனை தெரிவித்தார்.
வாடிய பயிரைப் கண்டபோதெல்லாம் வாடினேன் எனக் கூறிய வள்ளலார் பிறந்த ஊருக்கு அருகிலே பயிர்கள் அழிக்கப்படுவதை காண முடியவில்லை என்றும், நிலத்தை எடுப்பதற்கு ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், பயிர்கள் அழிக்கப்படுவதை ஏற்க முடியாது என தெரிவித்தார். ஒரு பயிர் என்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும், மனிதன் உள்ளிட்ட அத்தனை ஜீவ ராசிகளுக்கும் வாழ்வாதாரமாக பயிர்கள் இருப்பதாகவும், இழப்பீடு பெற்றாலும் பயிர்கள் அழிக்கப்படுகிறதே என கோபம் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நாம் உயிருடன் இருக்கும் காலத்திலேயே மிகப்பெரிய பஞ்சத்தை சந்திக்க போகிறோம் என்றும், அரிசிக்கும், காய்கறிக்கும் அடித்துக் கொள்வதை நம் தலைமுறையிலேயே பார்க்கத் தான் போகிறோம் என்றும், அப்போது நிலக்கரி பயன்படாது என்பது தனது கருத்து என தெரிவித்த நீதிபதி, இதற்காக என்.எல்.சி. கோபித்து கொண்டாலும் பரவாயில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.