சென்னை:தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது அயலான் படம் வெளியாகி உள்ளது. முன்னதாக அவர் மாவீரன், பிரின்ஸ், டான், டாக்டர், மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்களில் நடித்திருந்தார். அதில் மிஸ்டர் லோக்கல் படத்துக்காக, 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஒப்பந்தம் போட்டு, 15 கோடி ரூபாய் சம்பளம் பேசியுள்ளார்.
இந்த படம் கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதமே வெளியான நிலையில், சம்பளத்துக்கான டிடிஎஸ் தொகையை பிடித்தம் செய்த ஞானவேல்ராஜா, அதை வருமான வரித்துறையில் செலுத்தாததால், 2019-2020, 2020-2021ஆம் ஆண்டுகளுக்கான டிடிஎஸ் (TDS) தொகை 91 லட்சம் ரூபாயை, சிவகார்த்திகேயன் வங்கிக் கணக்கில் இருந்து வருமான வரித்துறை வசூலித்து உள்ளது. இதை எதிர்த்து நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து உள்ளார்.
அதில், தனது நடிப்பில் மிஸ்டர் லோக்கல் படத்துக்காக, 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஒப்பந்தம் போட்டு, 15 கோடி ரூபாய் சம்பளம் பேசியதாக குறிப்பிட்டு உள்ளார். 2019ஆம் ஆண்டு மே மாதமே படம் வெளியான நிலையில், சம்பளத்துக்கான டிடிஎஸ் தொகையை பிடித்தம் செய்த ஞானவேல்ராஜா, அதை வருமான வரித்துறையில் செலுத்தாததால், 2019 - 2020, 2020 - 2021ஆம் ஆண்டுகளுக்கான டிடிஎஸ் தொகை 91 லட்சம் ரூபாயை தனது வங்கிக் கணக்கில் இருந்து வருமான வரித்துறை வசூலித்ததாகவும், அதை திரும்ப வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது நடிகர் சிவகார்த்திகேயனுக்கும், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவிற்கும் இடையில் சுமூக தீர்வு ஏற்பட்டு, டிடிஎஸ் தொகை செலுத்தப்பட்டது. இந்த நிலையில், வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்த போது, சிவகார்த்திகேயனுக்கு திரும்ப வழங்க வேண்டிய 12 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வட்டியுடன் அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு விட்டதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதி, நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்த வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க:ரூ. 2 கோடி லஞ்சம்; மத்திய அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை - சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு..