சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் 33 ஆவது தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்காபூர்வாலா பதவி ஏற்றுக் கொண்டார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வரர்நாத் பண்டாரி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பணி ஓய்வு பெற்றார்.
இதனை அடுத்து மூத்த நீதிபதி எம்.துரைசாமி, நீதிபதி டி.ராஜா ஆகியோர் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்து வந்த நிலையில், தற்போது அவர்களும் பணி ஓய்வு பெற்றனர். இதனால் கடந்த 8 மாதங்களாகவே தலைமை நீதிபதி பணியிடம் நிரப்ப படமால் காலியாக இருந்து வந்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.வி.கங்காபூர்வாலாவை, சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை ஏற்ற குடியரசுத் தலைவர், நேற்று முன்தினம் எஸ்.வி.கங்காபூர்வாலாவை தலைமை நீதிபதியாக நியமித்து உத்தரவிட்டார்.
இதனையடுத்து தலைமை நீதிபதியாக இன்று காலை சுமார் 10 மணி அளவில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் எஸ்.வி.கங்காபூர்வாலாலுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவர் இந்தியா விடுதலை பெற்ற பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தின் 33 ஆவது தலைமை நீதிபதி ஆவார்.
இந்த நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், கொல்கத்தா உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.வைதியாநாதன், ஆர்.மகாதேவன் உள்ளிட்ட நீதிபதிகளும், அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி, உதயநிதி ஸ்டாலின், கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியம் உள்ளிட்டோரும், சபாநாயகர் அப்பாவு, தலைமைச் செயலாளர் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர், அரசு வழக்கறிஞர்கள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள், மூத்த வழக்கறிஞர்கள், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பதவியேற்ற புதிய தலைமை நீதிபதிக்கு அமைச்சர்கள் பூங்கொத்து மற்றும் புத்தகம் அளித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து கீழே அமர்ந்திருந்த அவரின் தாயிடம் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி வாழ்த்து பெற்றார்.
கடந்த 1962 ஆம் ஆண்டு மே மாதம் மகாராஷ்டிராவில் பிறந்த நீதிபதி கங்காபூர்வாலா, சட்டப்படிப்பை முடித்து, 1985 ஆம் ஆண்டு வழக்கறிஞராக தனது பணியை தொடங்கினார். கடந்த 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மும்பை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட கங்காபூர்வாலா, கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Parliament: புதிய நாடாளுமன்ற கட்டடம் இன்று திறப்பு.. பழைய நாடாளுமன்ற கட்டடம் என்ன ஆகும்?