சென்னை:சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் புருசோத்தமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், "மாணவர்களிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள், அவற்றை ஆசிரியர்களின் நலனுக்காக பயன்படுத்துவதில்லை.
ஆசியர்களுக்கு குறைவான ஊதியம் அளிப்பதோடு, மாணவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தை மற்ற தேவைகளுக்கு பயன்படுத்துகிறார்கள். அதனால், ஆசிரியர்களுக்கு வாடகையில்லா குடியிருப்புகளை கட்டிக் கொடுப்பதை கட்டாயமாக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.
மேலும், ஆசிரியர்கள் குடியிருப்புகள் கட்ட தேவையான நிலத்தை ஒதுக்கீடு செய்யவும், வீடு வாங்க விரும்பும் ஆசிரியர்களுக்கு மானியம் வழங்கவும், வட்டியில்லா வீட்டுக்கடன் வழங்கவும் உத்தரவிட வேண்டும்" என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று(மே.17) சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும், இந்த மனுவை ஏற்றுக் கொண்டால், தவறான முன்னுதாரணமாகிவிடும் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி மத்திய - மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வாடகையில்லா குடியிருப்புகள் கட்டித்தரக் கோரும் இந்த பொதுநல வழக்கை கடந்து, தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலை குறித்து நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.
தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் குறைவான ஊதியத்திற்கு கொத்தடிமைகள் போல வேலை செய்யும் நிலை உள்ளது. அண்மையில் 12 மணி நேர வேலை மசோதாவிற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அந்த மசோதா திரும்பப் பெறப்பட்டது. ஆனால், பல தனியார் பள்ளிகளில் இன்றளவும் ஆசிரியர்கள் 10 மணி நேரத்தைக் கடந்து பணிபுரிய நிர்பந்திக்கப்படும் அவல நிலை இருக்கிறது. தங்கள் பள்ளிகளில் பேருந்து வசதி, ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இருக்கின்றன என்று கவர்ச்சியாக விளம்பரம் செய்யும் தனியார் பள்ளிகள், அங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு போதிய ஊழியம் வழங்குவதில்லை என்பதுதான் நிதர்சனம்.
தனியார் பள்ளி ஆசிரியர்களின் மோசமான நிலையை கரோனா காலம் நமக்கு வெளிச்சம்போட்டு காட்டியது. கரோனாவை காரணம் காட்டி, பல தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதனால், வாழ்வாதாரத்திற்காக அந்த குறைந்த ஊதியம் கொண்ட வேலையாவது தக்க வைக்க வேண்டும் என்பதற்காக ஆசிரியர்கள் கடுமையாக வேலை செய்தனர். ஆன்லைன் வகுப்புகளால் அவர்களது பணி நேரம் மேலும் நீடித்தது. கரோனா காலகட்டத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட பல தனியார் பள்ளி ஆசிரியர்கள் பிற வேலைகளைச் செய்து பிழைப்பு நடத்தியதை சமூக வலைதளங்களிலும் காண முடிந்தது. அதனால், தனியார் பள்ளி ஆசிரியர்களின் பணிச்சுமை மற்றும் ஊதிய உயர்வை நெறிப்படுத்த அரசு ஆவன செய்யலாம்.
இதையும் படிங்க: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை கடைசி நாள் - மவுசு குறையாத பி.காம்!