சென்னை:கடந்த 2001-2006ஆம் ஆண்டுகளில் மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராக பதவி வகித்த ஓ.பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 77 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் குவித்ததாக, 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.
மேலும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி, மகன் ரவீந்திரநாத், ஓபிஎஸ்-இன் சகோதரர் ஓ.ராஜா, அவரது மனைவி சசிகலாவதி, மற்றொரு சகோதரர் ஓ.பாலமுருகன், அவரது மனைவி லதா மகேஸ்வரி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.
சிவகங்கை நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்கில், குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, வழக்கைத் திரும்பப் பெற அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையை ஏற்ற சிவகங்கை நீதிமன்றம், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை விடுவித்து 2012ஆம் ஆண்டில் சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்வது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு இன்று (செப்.27) மீண்டும் விசாரணைக்கு வந்த போது, பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்டோர் தரப்புக்கு, வழக்கின் ஆவணங்களை வழங்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நவம்பர் 23ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி மூலம் அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்