சென்னை: கொலை வழக்கு ஒன்றில் செல்வம் என்பவருக்கு திருநெல்வேலி நீதிமன்றம், மரண தண்டனை விதித்தது. பின்னர், அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இதனையடுத்து, கடந்த 1994ஆம் ஆண்டு முதல் தண்டனை அனுபவித்து வரும் அவர், தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குழந்தைகளின் படிப்புக்கு ஏற்பாடு செய்யவும், வீட்டை பழுது பார்க்கவும் 40 நாட்கள் விடுப்பு கோரி சிறைத் துறைக்கு விண்ணப்பித்தார். அதன் மீது எந்த முடிவும் எடுக்கப்படாததால், விடுப்பு வழங்க உத்தரவிடக் கோரி செல்வம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் சுந்தர் மற்றும் சக்திவேல் அமர்வு விசாரித்தது. அப்போது, கடந்த 29 ஆண்டுகளில் 15 முறை விடுப்பில் வெளி வந்துள்ளதாகவும், அந்த நேரங்களில் எந்த அசம்பாவித சம்பவங்களிலும் ஈடுபடாமல், குறிப்பிட்ட நாட்களில் மீண்டும் சரணடைந்துள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.