சென்னை:கடந்த 1991 - 1996ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்த இந்திர குமாரியின் நேர்முக உதவியாளராக பணியாற்றியவர், வெங்கடகிருஷ்ணன். இந்த நிலையில், வருமானத்துக்கு அதிகமாக 73 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக வெங்கடகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி மஞ்சுளாவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, இருவரையும் விடுதலை செய்து, 2012ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார்.
சாதாரண பின்னணியைக் கொண்ட வெங்கடகிருஷ்ணன் வீட்டில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் வெளிநாட்டு கரன்சிகள், சொத்து ஆவணங்கள், தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதையும், அவரது மனைவி மஞ்சுளாவுக்கு என தனிப்பட்ட எந்த வருவாய் ஆதாரம் இல்லாததையும் கருத்தில் கொள்ளாமல், இருவரையும் விடுதலை செய்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.