தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தோட்டக்கலை சங்கத்திடமிருந்து நிலம் மீட்டதை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கு - அரசு பதிலளிக்க உத்தரவு! - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள 114 கிரவுண்ட் நிலத்தை தோட்டக்கலை சங்கத்திடம் இருந்து மீட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MHC
கோப்புப்படம்

By

Published : Aug 8, 2023, 4:35 PM IST

Updated : Aug 8, 2023, 4:48 PM IST

சென்னை:சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள 114 கிரவுண்ட் 534 சதுர அடி நிலத்தை தனியார் நிலமாக அங்கீகரித்து, தோட்டக்கலை சங்கத்துக்கு பட்டா வழங்கி கடந்த 2011ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்து இருந்தார். இந்த உத்தரவை ரத்து செய்து கடந்த ஜூன் 5ஆம் தேதி நில நிர்வாக ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து தோட்டக்கலை சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கடந்த ஜூலை 4ஆம் தேதி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் விசாரித்தார்.

அப்போது, விதிகளை மீறி, அதிகார துஷ்பிரயோகம் செய்து இடத்தை எடுத்து உள்ளதால், நில நிர்வாக ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும், அரசியல் உள்நோக்கத்துடன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் தோட்டக்கலை சங்கம் தரப்பில் வாதிடப்பட்டது. தமிழக அரசு தரப்பில், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும், நில நிர்வாக ஆணையருக்கு தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நிலத்தை அரசு எடுத்தது சரி எனக் கூறி, தோட்டக்கலை சங்கம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தோட்டக்கலை சங்கம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று(ஆகஸ்ட் 8) தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நூறு கிரவுண்ட் நிலத்தை எடுத்துக் கொண்ட அரசு, 400 கோடி ரூபாய் அபராதம் விதித்து உள்ளதாகவும், எந்த ஆவணங்களையும் சரிபார்க்காமல் தனி நீதிபதி, தங்கள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதாகவும் தோட்டக்கலை சங்கம் தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழக அரசுத் தரப்பில், அவசரகதியில் நிலம் ஆர்ஜிதம் செய்யவில்லை என்றும், போதுமான விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்கப்பட்ட பிறகே வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது. அப்போது, மனுதாரர் தரப்பில், ஊழல் அதிகாரி ஒருவர், ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்துக்கு தோட்டக்கலை சங்கத்துக்கு பட்டா வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, தமிழக அரசு மற்றும் மனுதாரர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை அக்டோபர் 5ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க: கீழடி அகழாய்வில் படிகத்தால் ஆன எடைக்கல் கண்டெடுப்பு: தொல்லியல் ஆர்வலர்கள் வியப்பு!

Last Updated : Aug 8, 2023, 4:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details