சென்னை:ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது. இந்தச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனுசிங்வி, ஏ.கே. கங்குலி, ஆரியமா சுந்தரம், பி.எஸ். ராமன் வாதாடுகையில், ”கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி சில மரணங்கள் நிகழ்ந்ததால் இந்த விளையாட்டிற்கு தடை விதித்ததாக தமிழ்நாடு அரசு தெரிவித்தது. ஆனால், ஜல்லிக்கட்டு போட்டியின்போது ஒவ்வொரு ஆண்டும் 20 பேர்வரை உயிரிழக்கின்றனர். உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டிற்கு தடை விதித்தும், மாநில அரசு சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்துகிறது.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளிக்கும் அரசு, ஆன்லைன் விளையாட்டிற்கு மட்டும் தடை விதித்து சட்டம் இயற்றியுள்ளது. இது திறமைகளுக்கான விளையாட்டு. சூதாட்டம் இல்லை . எந்தவொரு காரணமும் இல்லாமல் இந்த தடை விதிக்கபட்டுள்ளது” என்றனர்.