Health Minister Maa.Subramanian சென்னை:எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வு செய்து, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், "மெட்ராஸ்-ஐ (madras-eye) என்று அழைக்கப்படும் கண் வெண்படல அழற்சி நோய், சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சென்னையில் மட்டுமல்லாமல் டெல்லியில் நடைபெற்றுள்ள கூட்டத்தில் கூட இதுகுறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் குஜராத், மகாராஷ்டிரா மற்றும் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம், மணிப்பூர் போன்ற பல்வேறு மாநிலங்களிலும் இந்த நோயின் பாதிப்பு அதிகரித்து வருகிறது" என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஒவ்வொரு வருடமும் வடகிழக்கு பருவமழை காலத்திற்கு முன் இந்நோயின் பாதிப்பு அதிகரிப்பதாகவும், இந்நோயால் பாதிக்கப்படும் மக்களை பாதுகாக்கின்ற வகையில் இம்மருத்துவமனையில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது" என தெரிவித்தார்.
மேலும் இந்த நோயின் அறிகுறிகளாக கண் வலி மற்றும் கண் சிவந்து போகுதல், கண்களில் நீர் வழிதல், கண்களில் எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படுதல், கண்களில் அழுக்கு வெளியேறி இமைப்பகுதிகள் ஒட்டிக் கொள்ளுதல், கண்களில் தூசி அல்லது வேறு வெளிப்பொருள் உள்ளது போன்ற உணர்வு ஏற்படுதல் போன்றவை இருக்கும் என்று கூறினார்.
தொடர்ந்து இந்த நோய் பருவநிலை மாறுபாட்டினாலும், எண்டிரோ வைரஸ் (Entro Virus), அடினோ வைரஸ் (Adino Virus) என்று சொல்லக்கூடிய இரு வகையான வைரஸ்களால் ஏற்படுகிறது என்பதை ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், மெட்ராஸ்-ஐ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்கள் மற்றும் கைகளை நல்ல நீரினால் அடிக்கடி கழுவ வேண்டும் என்றும், கண்களுக்கு நல்ல ஓய்வு அளிக்க வேண்டும் என்றும், கண் மருத்துவரின் ஆலோசனையின் அடிப்படையில் மட்டுமே சொட்டு மருந்துகளை உபயோகிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மேலும், சுயமாக மருந்துகளை பயன்படுத்தக்கூடாது என்றும், பாதிக்கப்பட்டவர்கள் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து போட உதவுகிறவர்கள் மருந்து போடும் முன்பும், மருந்து போட்ட பின்பும் கைகளைச் சுத்தமாகக் கழுவிக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
நல்ல ஆரோக்கியமான, நீர்ச்சத்து மிகுந்த வைட்டமின் ஏ மற்றும் சி (Vitamin A&C) சத்துள்ள உணவு உட்கொள்ள வேண்டும், நல்ல உறக்கம், கண்ணுக்கு ஓய்வு அளித்தல் போன்றவை நோய் பாதிப்பிலிருந்து விரைவில் குணமடைய உதவும் என்றும் பொது மக்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும் மெட்ராஸ்-ஐ பாதிப்புகளை தடுக்க தமிழ்நாடு முழுவதும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தியுள்ளதாகவும், தமிழ்நாட்டில் இருக்கின்ற 38 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் இதற்கான சிகிச்சைகளும் மருந்துகளும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து, மெட்ராஸ்-ஐ நோய் குறித்து மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு தேவைப்படும் நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மாநகராட்சி பள்ளிகள், தனியார் பள்ளிகள், அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றில் கல்வி பயின்று வரும் ஏறத்தாழ 12 லட்ச மாணவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் பருவ மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக, இம்மாதம் 16ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை, தொடர்ந்து 10 நாட்களுக்கு 400க்கும் மேற்பட்ட கண் மருத்துவர்கள், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ரோட்டரி கிளப், அரிமா சங்கம் போன்ற அமைப்பை சார்ந்த மருத்துவர்களை கொண்டு மெட்ராஸ்-ஐ பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட உள்ளதாக அறிவித்தார்.
மேலும் எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் செப்டம்பர் மாதம் வரை 283 பேர் பயனடைந்துள்ளதாகவும், கடந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 28,236 மக்கள் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பயனடைந்தாகவும், இதுவரை தமிழகத்தில் 3,702 பேர் கண் தானம் செய்துள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: பள்ளிக்கல்வித்துறை வழக்குகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - அதிரடி உத்தரவு பிறப்பித்த பள்ளிக்கல்வித்துறை!