தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாரி செல்வராஜூக்கு தலைவலியாக அமைந்த ஃபகத் ஃபாசில்! இளைஞர்களை திசை திருப்புகிறதா மாமன்னன்? - maamannan in netflix

மாமன்னன் படம் ஓடிடியில் வெளியான நிலையில் தற்பொழுது நெட்டிசன்கள் ஃபகத் ஃபாஸிலின் காட்சிகளை அவரவர் சாதி பாடல்களை போட்டு வீடியோ வெளியிடுவது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

மாரி செல்வராஜூக்கு தலைவலியாக அமைந்த பகத் பாசில்!
மாரி செல்வராஜூக்கு தலைவலியாக அமைந்த பகத் பாசில்!

By

Published : Jul 31, 2023, 9:30 PM IST

சென்னை:மாரி செல்வராஜ் தனது மாறுபட்ட படங்களின் மூலம் சிறந்த இயக்குநராக அனைவர் மத்தியிலும் அறியப்படுபவர். இவரது இயக்கத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இவரது படங்கள் எப்போதும் சமூக நீதி மற்றும் பட்டியலின மக்களின் வலியைப் பேசும் படங்களாகவே இருக்கும்.‌

இந்த வகையில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய படம் ‘மாமன்னன்’ கடந்த ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் ஃபகத் ஃபாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆனதும் இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அவரது கடைசி படமாக மாமன்னன் அமைந்தது.

படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. மேலும் படம் வெளியாகி இது முன்னாள் சபாநாயகர் தனபால் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் இருப்பதாக கருத்து நிலவியது. இதில் நடிகர் வடிவேலு வித்தியாசமான வேடத்தில் நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றார்.

அது மட்டுமின்றி ஃபகத் ஃபாசில் ரத்தினவேல் என்ற கேரக்டரில் நடித்து மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். திரையரங்குகளில் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து இம்மாதம் (ஜூலை) இறுதியில் நெட்பிளிக்ஸ் (Netflix) ஓடிடி தளத்தில் படம் வெளியிடப்பட்டது.

அதிலும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது இப்படம். இந்நிலையில் இப்படம் சமூக நீதி மற்றும் ஆதிக்க சாதியினரின் அடக்குமுறைகளை பற்றி பேசியது. இப்படத்தில் ஆதிக்க சாதியினரை சேர்ந்தவராக ஃபகத் ஃபாசில் நடித்திருந்தார். படத்தில் பட்டியலினத்தவர்களை நல்லவர்களாகவும் அவர்களுக்கு எதிரான மனநிலை கொண்ட ஆதிக்க சாதியைச் சார்ந்தவரை வில்லனாகவும் மாரி செல்வராஜ் காட்டியிருப்பார்.

இதையும் படிங்க:Leo Update - 5 மில்லியன் பார்வைகளை கடந்த சஞ்சய் தத் கிளிம்ப்ஸ்!

இந்த நிலையில் தங்களது சாதியைச் சேர்ந்த இவர் பெருமைக்குரியவர் என்ற வகையில் பாடல்களை இணைத்து சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர். ஃபகத் ஃபாஸில் கேரக்டருக்கு எந்த சாதித் தலைவரின் பாடலை போட்டாலும் பொருத்தமாக இருக்கிறது என்று இணையதளத்தில் கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் படம் ஓடிடியில் வெளியான பின்பு ஃபகத் ஃபாசிலின் கேரக்டரை ஹீரோவாக்கி பல்வேறு வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது. சாதி பாகுபாடு மாற வேண்டும் என்ற எண்ணத்தில் எடுத்த படத்தை தலைகீழாக நெட்டிசன்கள் மாற்றி பதிலடி கொடுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாரி செல்வராஜ் எந்த நோக்கத்திற்காக இப்படத்தை எடுத்தாரோ அதுவே மறைந்து சாதி வெறி பிடித்த நபரை நாயகனாக சித்தரித்து பல்வேறு சமுதாய மக்களின் பிரதிநிதியாக வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இது போன்று ஏராளமான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் தற்பொழுது உலா வருகின்றன.

இதுகுறித்து ஒரு தரப்பினர் நன்றாக நடிக்கத் தெரிந்த நபரை இது போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தால் இப்படித்தான் ஆகும் என்று பதிவிட்டு வருகின்றனர். உண்மையில் ஃபகத் ஃபாசில் நடிப்பு இப்படத்தில் மிக அற்புதமாக இருந்தது. ஆனால், மாரி செல்வராஜ் எந்த நோக்கத்திற்காக இப்படத்தை எடுத்தாரோ அதுவே தற்போது அவருக்கு பின் விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

அது மட்டுமின்றி இது இன்றைய இளைய தலைமுறையினருக்கு தவறான முன்னுதாரணமாக மாறி விடும் பேராபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சாதி ஒழிய வேண்டும் என்று கருத்துகள் நிலவி வரும் இந்த சமயத்தில் இது போன்ற வீடியோக்கள் இளம் தலைமுறையினரை வேறு பாதைக்கு அழைத்துச் சென்று விடும் ஆபத்தும் இதில் உள்ளதாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது மாரி செல்வராஜூக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி இருப்பதாக சினிமா வட்டாரத்தால் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:நெட்டிசன்களின் அலப்பறையால் மாமன்னன் படத்தின் ஹீரோவான ஃபகத் ஃபாசில்!!

ABOUT THE AUTHOR

...view details