சென்னை:எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள டெங்கு சிறப்புப் பிரிவை மா. சுப்பிரமணியன் பார்வையிட்டனர். இதில் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மருத்துவமனையைப் பார்வையிட்ட பிறகு செய்தியாளரைச் சந்தித்த மா. சுப்பிரமணியன், “வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து டெங்குவின் தாக்கம் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. அனைத்துத் துறைகளிலும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து தெரிவித்திருக்கிறோம்.
காப்பீடு திட்டத்தின் மூலம் சிகிச்சை
தமிழ்நாட்டில் உள்ள தாய்மார்களுக்கு ஒரு வேண்டுகோள், குழந்தைகளுக்கு கல்லீரல் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றால் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் மூலம் சிகிச்சை பெறலாம்.
தமிழ்நாட்டில் நியுமோகோக்கல் தடுப்பூசி ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 288 குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கரோனா தடுப்பூசி போடும் பணியில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மெகா தடுப்பூசி முகாம்களை கடந்த வாரம் முதலமைச்சரே நேரில் சென்று ஆய்வுமேற்கொண்டார்.
செவிலியரின் சேவையைத் தமிழ்நாடு அரசு மறக்காது. செவிலியர் தடுப்பூசி முகாம்களில் முழு அளவில் ஆர்வமுடன் செயல்பட்டுவருகின்றனர். செவிலியர் கேட்கும் நாள்களில் வார விடுமுறை வழங்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக். 10இல் ஐந்தாம் கட்ட தடுப்பூசி முகாம்
75 விழுக்காடு மக்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டாலே கரோனா பரவல் பாதிப்பைக் குறைக்கலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 33 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. 15 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 64 விழுக்காடு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
25 விழுக்காடு பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஐந்தாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம், வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. 30 ஆயிரம் சிறப்பு முகாம் மூலம் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. தூண்டுதலின் பேரில் தவறுதலாகப் போராட்டம் நடத்தியதாகச் செவிலியர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
செவிலியர் போராட்டம் தொடர்பாக மூன்று பேர் கொண்ட குழு அமைத்துள்ளோம். 15 நாள்களில் அறிக்கை சமர்பிப்போம். கரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவப் பணியாளர்களின் உழைப்பு வீணாகக் கூடாது என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: நீலகிரி புலியை கொல்ல வேண்டாம்- உயர் நீதிமன்றம்