சென்னை:தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் ஏழாவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகின்றது. இதில் சென்னை அடையாறு பகுதியில் கஸ்தூரிபாய் நகரில் உள்ள தடுப்பூசி முகாவினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், தென்சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை மாநகராட்சி ஆணைநர் ககன்தீப் சிங் பேடி மற்றும் சுகாதார அலுவலர்கள் பங்கேற்றனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மா. சுப்பிரமணியன் பேசுகையில், “தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 7ஆவது தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
ஆர்வமுடன் மக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 73 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 87 விழுகாட்டினர் முதல் தவணையும், 48 விழுகாட்டினர் இரண்டாவது தவணையும் செலுத்தியுள்ளனர். கடந்த 3 மாதங்களில் தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட வில்லை.
அதனால் நவம்பர் மாதத்திற்கு 1 கோடி 40 லட்சம் தடுப்பூசி ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. நவம்பர் மாத இறுதிக்குள் 100 விழுக்காடு முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு இடம் பெறும். இதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நவம்பர் ஒன்றாம் தேதி திறக்கப்படும் பள்ளிகளை பொறுத்தவரை உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் விதிமுறைகளை பின்பற்றி தீபாவளி பண்டிகையை மக்கள் கொண்டாட வேண்டும்.