சென்னை:பெசன்ட் நகர் பகுதியில் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று, டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் பிளீச்சிங் பவுடர் பாக்கெட்டுகளை வழங்கினார்.
இதனையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது, “தமிழ்நாட்டில் உள்ள 2,972 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலிருந்து தினசரி காய்ச்சல் உள்ளவர்கள் கண்டறியப்பட்டு, கிராமம் மற்றும் நகரங்கள் வாரியாக பட்டியல்கள் தயார் செய்து, அந்தந்த மாவட்டங்களுக்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெங்கு பாதிப்பு:உள்ளாட்சித் துறைகளுடன் இணைந்து கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சுமார் 23,717 தற்காலிகப் பணியாளர்கள் தினசரி ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் 2.50 லட்சத்திற்கும் மேற்பட்ட டெங்கு மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் இதுவரை 4,227 நபர்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு, தற்பொழுது 343 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொசு ஒழிப்பு நடவடிக்கைகள்: இந்த ஆண்டு 3 நபர்கள் இறந்துள்ளனர். சென்னை மாநகரில் கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டு, 14.87 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 424 மருந்து தெளிப்பான்கள், 120 பவர் ஸ்பேரயர்கள், பேட்டரி மூலம் இயங்கும் 300 ஸ்பிரேயர்கள், 324 கையினால் இயங்கும் புகைப்பரப்பும் இயந்திரங்கள், 1 சிறிய புகைப்பரப்பும் இயந்திரம், வாகனங்களில் பொருத்தப்பட்ட 68 புகைப்பரப்பும் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
மருந்துகள் இருப்பு வைக்க அறிவுரை: பெருநகர சென்னை மாநகராட்சியில் கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ள 954 பணியாளர்கள், 2,324 ஒப்பந்தப் பணியாளர்கள் என மொத்தம் 3,278 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 23,717 பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என்றார்.