சென்னை: ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கரோனாவிற்குப் பிந்தைய சிகிச்சை மையத்தை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து ஃபிரான்ஸ் நாடு - செயின்ட் கோபெயின் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்சிஜன் தயாரிக்கும் கருவியை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு திறந்துவைத்தார்.
அப்போது மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை முதன்மைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு - புதுச்சேரி துணைத் தூதரக அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கரோனாவிற்குப் பிந்தைய நல் வாழ்வு மையம்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மா. சுப்பிரமணியன், "முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கரோனா தொற்றுக்குப் பிந்தைய கண்காணிப்பு மையம் தொடங்கப்படும் எனச் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து கிண்டியில் உள்ள கரோனா மருத்துவமனையில் கரோனாவுக்குப் பிந்தைய மருத்துவ மையத்தை முதலமைச்சர் தொடங்கிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கரோனாவிற்குப் பிந்தைய மருத்துவ மையங்கள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளன. கோவிட் தொற்று பாதிப்பிற்குப் பிந்தைய நல் வாழ்வு மையம் ஓமந்தூரார் மருத்துவமனையிலும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
கரோனாவிற்குப் பிந்தைய மருத்துவ மையம் ஆறு நிமிட நடைப் பயிற்சி, யோகா பயிற்சி ஆகியவையும் இங்கு வழங்கப்படும். இங்கு நிறுவப்பட்டுள்ள ஆக்சிஜன் தயாரிக்கும் கருவி மூலம் பிற மருத்துவமனைகளுக்குத் தேவையான ஆக்சிஜனைக் கொண்டுசெல்ல முடியும்.
70 மருத்துவமனைகளில் ஆக்சிஜன் ஆலைகள்
மேலும் சிலிண்டர் மூலம் ஆக்சிஜன் நிரப்பி வேறு மருத்துவமனைக்கு அனுப்ப முடியும். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 47 ஆயிரத்து 92 பேருக்கு கரோனா மருத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
சமூகப் பொறுப்பு நிதி மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பங்களிப்போடு தமிழ்நாட்டில் 70 மருத்துவமனைகளில் ஆக்சிஜன் ஆலைகளை உருவாக்கும் பணி நடைபெற்றுவருகிறது.
இதில் முதல்கட்டமாக சென்னையில் ராஜிவ் காந்தி, ஸ்டான்லி உள்ளிட்ட ஐந்து மருத்துவமனைகளில் இதற்கான பணி தொடங்கியுள்ளது. ஒவ்வொரு மருத்துவமனையிலும் குறைந்தபட்சமாக இரண்டு கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:'வரும் தேர்தலில் 150 இடங்களில் பாஜக வென்று ஆட்சிக் கட்டிலில் அமரும்!'