சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17.06.2023) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில் சென்னை, நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தால் சென்னை, ஆலந்தூர் வட்டம், நந்தம்பாக்கத்தில் 116 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 56 ஏக்கர் நிலப்பரப்பில், நிதிநுட்ப நகரம் (FinTech City) அமைப்பதற்கும், அங்கு முதற்கட்டமாக 254 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5.6 லட்சம் சதுர அடி கட்டட பரப்பளவில் சர்வதேச தரத்திலான நிதிநுட்ப கோபுரம் (FinTech Tower) என்ற அடுக்குமாடி கட்டடம் கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், "கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு எடுத்த பல்வேறு முன்னெடுப்புகளின் காரணமாக தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கிறது. இந்தியாவுக்கே முன்மாதிரியான மாநிலமாக தமிழ்நாடு வளர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, தொழில்துறையானது மிக வேகமான முன்னேற்றங்களை உருவாக்கித் தந்து வருகிறது.
தமிழ்நாடு அரசின் தொழில்துறை நிகழ்ச்சிகள் என்பவை மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் நிகழ்ச்சிகளாக அமைந்திருக்கின்றன. தொழில்துறையில், சாதனை மேல் சாதனைகளை தமிழ்நாடு செய்து வருகிறது. முதலீடுகளை ஈர்ப்பதற்கு எடுத்து வைத்திடும் ஒவ்வொரு அடியும், வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் ஒரு பெரிய இலட்சியத்தினைக் கொண்டதாக இருக்கின்றது. இவை பல மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டின் இந்த கடுமையான முயற்சி, உலகளாவிய நிறுவனங்களது கவனங்களை வெகுவாக ஈர்த்திருக்கிற காரணத்தால் தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை மேற்கொள்ள தமிழ்நாட்டை நோக்கி வந்த வண்ணம் இருக்கின்றது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள இளைஞர்களும், பெண்களும் அவர்களது வசிப்பிடத்திற்கு அருகிலேயே பணிபுரிய ஏதுவாக, பரவலாக, மாநிலம் முழுவதும் இம்முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நிதிநுட்பத் துறைக்கான மின்னணு மயமாக்கப்பட்ட நிதி சேவைகள் அனைத்தும் ஏழை எளிய மக்கள் அனைவரையும் சென்றடையவேண்டும். ஆன்லைன் விற்பனைகள் இன்னும் பலமடங்கு அதிகரித்திருக்கிறது. கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் அதிகரிக்கத் தொடங்கிய மின்னணு மயமாக்கப்பட்ட வங்கிச் சேவைகளின் பயன்பாடு, தற்போது பன்மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
தற்போதுள்ள சூழ்நிலையில், ATM-இல் பணம் எடுப்பதைவிட, கைப்பேசி மூலமாக பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்வது அதிகமாக உள்ளது. வங்கிகள் ஏறக்குறைய முழு டிஜிட்டல் வங்கிகளாக மாறிவிட்டனவோ என்ற அளவிற்கு, தற்போது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகின்றன.