தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியது தென்மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம். நாமக்கலை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த சங்கத்தில், 5 ஆயிரத்து 500 எல்.பி.ஜி டேங்கர் லாரிகளின் உரிமையாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த லாரிகள் மூலம் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து, சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு சமையல் எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. முந்தைய ஐந்து ஆண்டு ஒப்பந்தம் கடந்த ஆண்டு அக்டோபருடன் முடிவடைந்து புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது.
அப்போது 5 ஆயிரத்து 500 எல்.பி.ஜி டேங்கர் லாரிகளுக்கும் பணி அளிக்க எண்ணெய் நிறுவனங்கள் ஒப்புக்கொண்டன. ஆனால் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி எட்டு மாதங்கள் ஆகியும், தற்போது வரை 4800 லாரிகளுக்கு மட்டுமே பணி கிடைப்பதாகவும், எஞ்சிய 700 லாரிகளுக்கு பணி வழங்கக் கோரி இன்று முதல் எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்திருந்தனர்.
இதையடுத்து கடந்த 26ஆம் தேதி சங்க நிர்வாகிகளுடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்திய அலுவலர்கள் மீதமுள்ளவற்றில் 100 எல்.பி.ஜி டேங்கர் லாரிகளுக்கு மட்டுமே பணி வாய்ப்பு தருவதாக அறிவித்திருந்தனர்.
அதனை ஏற்க மறுத்த லாரி உரிமையாளர்கள், திட்டமிட்டபடி இன்று தங்களது வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இது தொடர்பாக வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி ஆதிகேசலு டேங்கர் லாரி உரிமையாளர்கள் விவகாரத்தை விசாரிக்க மத்தியஸ்தர் ஒருவரை நியமித்தும், வழக்கு விசாரணையை இரண்டு வார காலத்திற்கு தள்ளி வைத்தார். இதனால் தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
மத்தியஸ்தராக ஜம்மு -காஷ்மீர் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பால் வசந்த குமார் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.