கரோனா வைரஸ் பலருக்கு மன அழுத்தம் கொடுப்பதால் அதை சமாளிக்க சென்னை மாநகராட்சி சார்பாக கவுன்சிலிங் மையம் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கரோனா வைரஸ் பெருந்தொற்று அறிகுறிகள் தென்பட்டு முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டவர்கள், ஊரடங்கால் வீட்டில் முடங்கி இருக்கும் முதியவர்கள், பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு தேவையான மனவள, உடல்நல ஆலோசனைகளை வழங்கி நெருக்கடியில் உள்ள நபர்களுக்கு உதவி வருகின்றனர்.
இந்தப் பணியில், சென்னை மாநகராட்சி மருத்துவர்களுடன் சென்னை லயோலா கல்லூரி தன்னார்வலர்களும் இணைந்து பணியாற்றிவருகின்றனர். கரோனா வைரஸ் கவுன்சிலிங் மையத்தில் ஒரு வாரத்தில் 22,000-க்கும் மேற்பட்ட அழைப்புகளை அவர்கள் கையாண்டுள்ளனர். இந்தஅலுவலகம் மூலம் சென்னையில் தமது வீடுகளிலும், அரசு மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 24,000 பேருக்கு ஆலோசனைகளும் ஆறுதல்களும் வழங்கப்பட்டுள்ளன.