தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புயலாக வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி; 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வங்கக்கடல் பகுதி

வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை புயலாக வலுப்பெறக்கூடும் எனவும், தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

low pressure area strengthens into a storm Chance of heavy rain in 9 districts of Tamil Nadu Chennai Meteorological Center Notification
புயலாக வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

By

Published : May 9, 2023, 3:09 PM IST

சென்னை:வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்தும், மழை வாய்ப்பு குறித்தும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்குத் திசை காற்றும், மேற்குத் திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. நேற்று (மே 8) தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காலை 05:30 மணி அளவில் (மே 9) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று அதே இடத்தில் நிலைகொண்டுள்ளது.

இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்று, நாளை (மே 10) தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் புயலாக மேலும் வலுபெறக்கூடும். இது மே 11ஆம் தேதி வரை வடக்கு - வடமேற்குத் திசையில் நகரக்கூடும். அதன் பிறகு வடக்கு - வட கிழக்குத் திசையில் திரும்பி வங்கதேசம் - மியன்மார் கடற்கரை நோக்கி நகரக்கூடும்.

இன்று (மே9) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை(மே 10) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மே 11ஆம் தேதி முதல் மே13ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை:தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மே 9 முதல் மே 13ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 - 4 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: இன்று (மே9) சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும், மே 10ஆம் தேதி மாலை முதல் சூறாவளிக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும், மே 11ஆம் தேதி மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும், 12, 13ஆகிய தேதிகளில் மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆழ் கடலிலுள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அமைச்சர் துரைமுருகன் முன்பு அடித்துக்கொண்ட திமுகவினர்.. நெல்லையில் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details