தென்காசி : புதிய நாடாளுமன்ற கட்டடம் நாளை (மே. 28) திறக்கப்பட உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த தருணத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தால் நேருவுக்கு செங்கோல் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதிகாரம் கைமாறுவதன் அடையாளமாக, மவுன்ட்பேட்டனிடம் இருந்து செங்கோல் ஜவஹர்லால் நேருவுக்கு வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதுபுறம் இருக்க புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நிறுவப்பட உள்ள செங்கோலுக்கு, சோழர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், சோழர்கள் ஆட்சிக் காலத்தில் கடைபிடிக்கப்பட்ட நடைமுறைகளில் ஒன்றுதான் செங்கோல் முறை என்றும் கூறப்பட்டது. பாண்டியர்கள் காலத்திலும், சிற்பக் கலை செழித்தோங்கி காணப்பட்டது என்றும் தென்னகத்தின் காசி என்று அழைப்படும் தென்காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள கலை வேலைப்பாடுகளே, புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நிறுவப்பட உள்ள செங்கோல் உருவகத்தின் சாட்சி என்றும் கூறப்படுகிறது.
அதாவது மிகவும் புகழ் பெற்ற தென்காசி காசி விஸ்வரர் கோயில் பராக்கிரமப் பாண்டிய மன்னர் ஆட்சி காலத்தில் 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில் கலை நயமிக்க சிற்பங்கள் கூடுதல் சிறப்பாக உள்ளது. கோயிலின் நுழைவுப் பகுதியில் சிவன் நடனமாடும் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
அங்கு நான்கு புறமும் சுற்றி பல்வேறு சிற்பங்கள் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் சிவன் ஊர்த்துவ தாண்டவம், மகா தாண்டவம் ஆடும் காட்சி சிற்பமாக கல்லில் செதுக்கப்பட்டு உள்ளது அதில் சிவன் இடது கையில் அதிகார நந்தி சின்னம் பொறித்த செங்கோலை கம்பீரமாக ஏந்தியபடி நடனமாடுகிறார்.